தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் என்று கூறினாலே அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரே நபர் உலகநாயகன் கமல் ஹாசன். தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே தனித்துவமான நடிப்பாற்றல் கொண்டவர் கமல்ஹாசன். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கமல்ஹாசன் தற்போது 2021 சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர பிரச்சார பணியாற்றி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படம் உருவாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் வெறும் 3 படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் மூன்று படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தது. இவர் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம் படம் மூலம் தனது முதல் படத்திலேயே தனித்துவமான கதைக்களத்துடன் அனைத்து சினிமா ரசிகர்களையும் தன வசம் இழுத்துக்கொண்டார். பின்னர் வெளியான கைதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு வெளியான மாஸ்டர் திரைப்படம் பற்றி சொல்லவே வேண்டாம். 50 சதவீத இருக்கையில் வெளி வந்தாலும் வசூல் சாதனை படைத்தது.
இதில் விஜய் கதாநாயகனாக நடித்தது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தது தான் படத்திற்கு ப்ளஸ் என்று கூறலாம். படம் வெளியான பிறகு விஜயின் கதாபாத்திரத்துக்கு இணையாக விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரமும் பெரியளவில் பேசப்பட்டது. அந்தளவிற்கு லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் வில்லன் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பர். அந்த வரிசையில் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் விக்ரம் படத்தில் அவருக்கு இணையான வில்லன் யார் என்ற பேச்சு அடிபட்டு கொண்டிருக்கிறது.
அதில் வில்லனாக நடிகர் பகத் பாசில், நடிகர் மற்றும் நடன இயக்குனருமான பிரபு தேவா ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள் என்ற வதந்தி கிளப்பப்பட்டது. ஆனால் தற்போது இந்த பிரபல நடிகர் தான் வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும் திரைப்பட இயக்குனருமான ராகவா லாரென்ஸ் கமல்ஹாசனிற்கு வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற செய்தி வைரலாக பரவி வருகிறது. இருப்பினும் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகும்வரை காத்திருந்து தான் ஆக வேண்டும்.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in